tamilnadu

img

மதம்சார் நடவடிக்கையை ஊக்கப்படுத்துவதா? அரசின் உத்தரவை மீறி மதுரை காமராசர் பல்கலை. வளாகத்தில் விநாயகர் சிலை... நடவடிக்கை எடுக்க எஸ்எப்ஐ கோரிக்கை

சென்னை:
அரசின் உத்தரவை மீறி மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டையோ, மதச்சார்பின்மையையோ பற்றி அக்கறை கொள்ளாத பாஜக அரசு, அனைத்து அரசு நிறுவனங்களையும் மதவயப்படுத்தும் சதியை அரசமைப்பிற்கு எதிராக முழு வீச்சில் முன்னெடுத்து வருகிறது. கல்வியைப் பொறுத்தவரை கட்டமைப்பிலும் உள்ளடக்கத்திலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை திணிக்கிற வேலையை பல அடுக்குகளில் செய்து வருகிறது. அதற்கு இயைந்தாற் போல் மதுரை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 20 வியாழனன்று இரவோடு இரவாக சிமெண்ட் மேடை கட்டப்பட்டு விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் விநாயகர்சிலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிறுவப்பட்டுள்ளது என விளக்கம் கேட்டு தொடர்பு கொள்ள முயற்சித்தால் பல்கலைக்கழக துணைவேந்தரோ, பதிவாளரோ இதுவரை அழைப்பிற்கு  பதிலளிக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் இந்தமதம் சார்  நடவடிக்கையானது அரசியலமைப்பின் முகப்புரை சொல்லும் இலட்சியங்களுக்கும் அது முன்னெடுக்கும் அறிவியல்பூர்வ அணுகுமுறைக்கும் விரோதமானதாகும். மேலும் தமிழகஅரசு G.O 420/2020ன் படி ஊரடங்குகாலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டங்களை பொது இடங்களில் முன்னெடுப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஆகவே உயர்நீதி மன்றத்தில் உறுதியளித்தபடி தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அச்சிலையை அகற்ற வேண்டும். அரசு கல்வி நிலைய வளாகங்களில் மத நடவடிக்கைகளைத் தவிர்த்து மதச்சார்பின்மை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்