சென்னை:
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தொகுதி உடன்பாடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று, கையெழுத்திடப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச் செல்வன்,டி.இரவிக்குமார் எம்.பி., பொருளாளர் முகமது யூசுப், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி எம்எல்ஏ. க.பொன்முடி எம்எல்ஏ, சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும். 6 தொகுதிகளை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு ஏற்பட்டது.தமிழகத்தை சனாதன பேராபத்தில் இருந்து காப்பாற்ற திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.தமிழகத்தில் பாஜக, சங்பரிவார அமைப்புகளால் காலூன்ற முடியாத நிலை உள்ளது. கலைஞர், ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த பாஜக முயற்சி செய்கிறது. 2017 ஆம் ஆண்டில் இருந்தே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துசெயல்பட்டு வருகிறது . திமுக வழங்கிய 6 தொகுதிகளை ஏற்று போட்டியிடுவது என்று முடிவெடுத்துள்ளோம். 6 தொகுதிகளை ஏற்கக்கூடாது என்று உயர்நிலை செயல்திட்டக்குழுவில் வலியுறுத்தினர். 6 தொகுதிகளை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும்.6 தொகுதிகளில் பொதுத் தொகுதி உள்ளதா என்பது குறித்து பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தார்.