tamilnadu

img

மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த விவகாரம் - தனியார் பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சுவாமி சித்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில், மாணவியை வகுப்பறைக்கு வெளியே தரையில் அமர வைத்து தேர்வெழுத வைத்த பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள செங்கோட்டை பாளையம் கிராமத்தில் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மாதவிடாய் காலம் என்பதால், அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே உள்ள படியில் அமர வைத்துத் தேர்வெழுத வைத்த அவலம் நடந்துள்ளது. 
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி நிர்வாகம் அப்பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.