சாலை வசதி கேட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்த வாணியங்குளம் மக்கள்
வேலூர், நவ. 1- வேலூர் ஓட்டேரி மற்றும் நாயக்கனேரி செல்லும் சாலையின் மலையடி வாரத்தில் அமைந்துள்ள வாணியங்குளம் கிராம மக்கள், சாலை வசதி கோரி சனிக்கிழமை அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். வேலூர் வட்டாட்சியர் வடிவேல் மற்றும் பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 15 முதல் 30 நாட்களில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததை யடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். 55க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், மக்கள் 150 ஏக்கர் பரப்பளவில் விவ சாயம் செய்து வருகின்றனர். முன்பு 110 அடி அகலம் கொண்டிருந்த சாலை, ஆக்கிரமிப்புகளால் தற்போது வெறும் 10 அடியாக குறைந்து போனது. சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஓடைக்கால்வாயை பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்துத் தர அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்த போதும், எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாத நிலை நீடித்தது. சமீபத்திய மழையால் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்ததால், ஊருக்கு செல்ல பாதை இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதனையடுத்து சனிக் கிழமை, சாலை வசதி மற்றும் நீர் போக்கு வரத்துக்கு முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரி, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த வேலூர் வட்டாட்சி யர் வடிவேல் மற்றும் பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்கள் 15 முதல் 30 நாட்களில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்ததையடுத்து, மக்கள் அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
