tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தீபாவளி சீட்டு மோசடி: தலைமறைவான பெண் கைது

சென்னை, நவ.1 – ஆர்.கே நகர் பகுதி யில் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறை வாயிருந்த பெண் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த பத்மாவதி, பவர் ஹவுஸ் பகுதியில் உணவகத்தில் வேலை பார்த்தபோது, உணவக உரிமையாளர் தமிழ்செல்வி தீபாவளி சீட்டு நடத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து பத்மாவதி தனக்கு தெரிந்த 25 நபர்களை 2024ஆம் ஆண்டு தீபாவளி சீட்டில் சேர்த்தார். ஒரு வருடமாக சுமார் ரூ.5 லட்சம் வசூல் செய்யப்பட்டது. 2024 தீபாவளிக்கு சீட்டு முதிர்வு தொகையை கேட்ட போது செல்வி பணம் தராமல் தொடர்ந்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பத்மாவதியின் புகாரின் பேரில் கடந்த அக்.5 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செல்வி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரினார். ஆனால் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யாமலும், நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமலும் தலைமறை வானார். ஆர்.கே நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலை மையிலான காவல் குழு தீவிர தேடுதலில் செல்வியை கைது செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்திய  நிறுவனங்களுக்கு மானியம்

சென்னை, நவ.1- உலகத் தமிழ் வர்த்தக சங்கமும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பும் இணைந்து நடத்தும்  12 உலக வர்த்தக மாநாடு டிசம்பர் 6 & 7ஆம் தேதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.  அம்மாநாட்டில்  இந்திய தமிழக சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், புதிய கிளைகளை நிறுவுவோர் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஒன்றிணைய உள்ளனர் இந்திய அரசும் மற்றும் தமிழக அரசு வேளாண்மை பொருட்களை ஏற்றுமதி செய்யவும், சிறுதானியங்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கவும், இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளன. மேலும் இந்திய ஆஸ்திரேலியா அரசுகளின் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவில் தொழில் முறை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா அரசு மானியங்களை வழங்க உள்ளது. அம்மானியங்களை பெற பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கவும் தொழில் முறை  ஆராய்ச்சிகளை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளன என உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு செல்லும் ரயிலில்  450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வேலூர், நவ.1- காட்பாடி - பீகார் தன்பூரில் இருந்து சென்னை பெரம்பூர், காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. வெள்ளியன்று ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். பின்பக்க பொது பயணிகள் பெட்டி யில் இருக்கைகளின் அடியில் தலா 30 கிலோ என 15 சிப்பங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 450 கிலோ ரேசன் அரிசியை கைப்பற்றினர். இந்த அரிசி ஆந்திரா அல்லது கர்நாடகத்துக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூதாட்டி வீட்டில் ரூ.1.25 லட்சம் திருட்டு

செய்யாறு, நவ.1 – திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த வேதகவுரி (70) என்ற மூதாட்டி, கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்குச் சென்றார். வியாழனன்று  திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.7,000 ரொக்கம், எல்இடி டிவி உள்பட மொத்தம் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. தூசி போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.