சென்னை:
கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்கள் அனைவருக்கும் இலவசமாககொரோனா தடுப்பூசி செலுத்தக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஜூன்2, 3, 4 ஆகிய நாட்களில் பிரதமருக்குமனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கிராமப்புற கிளைகள் , இடைகுழுக்கள், மாவட்டக்குழுக்கள் சார்பில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்டஆட்சியர் வழியாக பிரதமருக்குஅனுப்பி வைக்க நூற்றுக்கணக்கானமனுக்கள் அளிக்கப்பட்டன.
சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திலும், பொருளாளர் எஸ். சங்கர்புதுக்கோட்டை மாவட்டத்திலும், மாநில துணைத் தலைவர் பி.வசந்தாமணி திண்டுக்கல் மாவட்டத்திலும் கலந்து கொண்டனர்.விவசாயத் தொழிலாளர்கள் அனுப்பிய மனுவில் கூறப்பட்டிருப்பதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் கூறியதாவது:கொரோனா நோய் பரவல் காரணமாக தேசம் முழுவதும் விளிம்பு நிலை மக்கள் உட்பட பல்வேறு பிரிவினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இரண்டாவது அலையின் காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாண்டு போயுள்ளனர். மாநிலங்களில் தினசரி பல்லாயிரக்கணக்கில் நோய்த்தொற்றும் பல
நூறு மரணங்களும் தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்த நிலையில் தங்களின்அரசு கொரோனா தடுப்பூசி விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பது மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. உயிர் காக்கும் தடுப்பூசியை நாடுமுழுவதும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் இலவசமாக செலுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். இதற்காக பி.எம் கேர்ஸ் நிதியை ஒதுக்கீடு செய்யவும் கோருகிறோம். தடுப்பூசி உற்பத்தி - விநியோகம் இரண்டையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்ததுபோதும். மக்களுக்கு எதிரான இந்த கொள்கையை கைவிட்டு பொதுத்துறை மூலம் உற்பத்தி செய்வதையும், தடுப்பூசி செலுத்துவதை முற்றிலும் இலவசமாக மாநில அரசுகள் மூலம் உயிர்காக்கும் பணியை செய்திடவும் வலியுறுத்துகிறோம். தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதை மாநிலங்களின் தலையில் சுமத்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது, கிராமப்புற மக்களையும் - விளிம்பு நிலை மக்களையும் பாதுகாக்க உதவாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நோய்த்தொற்றால் பரிதவிக்கும் மக்களிடம் குறைந்தபட்சமாவது கருணையுடன் நடந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம். ஆகவே தேசம் முழு
வதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்திட வேண்டும்.
வருமான வரி செலுத்தாத ஏழைகுடும்பங்களுக்கு தேசம் முழுவதும் கொரோனா பரவல் ஊரடங்கு காலம் முழுவதும் மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். இத்துடன் மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகைபல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயைஉடனே வழங்கிட வேண்டும். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முனைகளிலும் செயல்படும் பாஜக அல்லாத மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவதை கைவிட்டு, பேரிடர்கால நிவாரண நிதியை மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப உடனே அனுப்பிடவும் வேண்டும் என வலியுறுத்தி மனுக்களை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.