சென்னை:
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணைகட்டி டெல்டா மாவட்ட விவசாயத்தையும் - விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கானல் நீராக்கும்பாஜக அரசுகளைக் கண்டித்து ஜூலை 17 அன்றுடெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள்சங்கம் - அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காவிரியில் தமிழ்நாட்டில் உரிமையை நிலைநாட்டிட நடந்து வந்த 100 ஆண்டுகாலப் போராட்டம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அதன்தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற தீர்ப்பு என ஒருவழியாக 2018 ஆம்ஆண்டு தீர்வை எட்டியுள்ள நிலையில், கர்நாடக பாஜக அரசு, தமிழகத்தின் உரிமையை பறித்திடவும்- டெல்டா பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கிடவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்கிடவேண்டும். ஆனால் அதை முழுமையாக நிறைவேற்றாமல் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் மிகுதியாக பெய்யும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள்நிரம்பி வழியும் உபரிநீரை கணக்கிலெடுத்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்கப்படுவதாக கூறி வருகிறது. அதையும் எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இரண்டு அணைகளின் தண்ணீரும் சேருமிடமான மேகதாது பகுதியில் புதிய அணைகட்டும் முயற்சியைத் துவங்கியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான கர்நாடக பாஜக அரசின்இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒன்றிய பாஜக அரசும் இதை கண்டும் காணாமல் இருக்கும் போக்கு நீடிக்கிறது. தமிழ்நாடு அரசு புதிய அணை கட்டும் முயற்சியைசட்டரீதியாகவும்-ஒன்றிய அரசின் கவனத்திற்குக்கொண்டு சென்றும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.
மேகதாதுவில் அணைகட்டும் பட்சத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் நாகை,திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும். விவசாய கூலி வேலைகளை மட்டுமே நம்பி வாழும் சுமார் 30 லட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் துயரத்தில் தள்ளப்படும் நிலை உருவாகும். ஆகவே கர்நாடக அரசு புதிய அணைகட்டும் முயற்சியை கைவிட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தலையிட்டு அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 17 அன்று டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சங்கம், விவசாயத்தொழிலாளர் சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களும் - பொதுமக்களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.