சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதி விபத்து 2 பேர் பலி
கடலூர், நவ. 4- கடலூர் முதுநகர் அடுத்த அன்னவெளி அருந்ததி நகரை சேர்ந்தவர் குப்பன் மகன் வடிவேல் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த தனபால் மகன் பாஸ்கர் (வயது 41), பெரிய காட்டு சாகை பகுதியை சேர்ந்த வரதன் மகன் ஜெயராஜ் (வயது 45) ஆகிய மூவரும் கட்டிட வேலை பார்த்து வருபவர்கள். தங்கள் வேலையை முடித்துவிட்டு அன்னவெளி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் நின்று அவர்களது சம்பள பணத்தை பிரித்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்பொழுது கடலூரில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அங்கிருந்த 3 படுகாயம் அடைந்தனர். இது தவிர அங்கிருந்த ஓட்டல் நடத்தி வரும் மோகன் (வயது 60 ) என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் வடிவேல் மற்றும் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஆவினங்குடி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஓட்டி வந்தார். அவருடன் போலீஸ் காவலர் இமாம் உசேன் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.இதை பார்த்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து காரில் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து சென்று விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறார்.
