tamilnadu

img

காட்சிப் பொருளாக மாறிய “நம்ம டாய்ல்ட்”

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கமுடியாது” எனக் கூறுவதுண்டு. ஏனென்றால் அவ்வளவு கொடுமையானது அந்த உபாதைகள். இதைக் கருத்தில் கொண்டுதான் மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் கடந்த காலங்களில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளை உருவாக்கின.சென்னை மாநகராட்சியில் 900 பொதுக் கழிப்பறைகள் இருந்தன. இவற்றில் பல கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் உள்ளன.சமீபத்தில் அதில் சில சீரமைக்கப்பட்டன. அவை முறையாக பராமரிக்கப்படாததாலும், சாலை விரிவாக்கத்தாலும் பல இடங்களில் காலப் போக்கில் அவை (பாதிக்கும் மேல்) காணாமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் 2015ஆம் ஆண்டிற்குள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, பொது சுகாதாரத்தை பேணிக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் “நம்ம டாய்லட்” திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில்நம்ம டாய்லட், இ (எலக்ட்ரானிக்)டாய்லட், பயோ டாய்லட், பிரைம் டாய்லட், 3 எஸ் டாய்லட்என 5 பிரிவுகளில் நவீன முறையில் டாய்லட்டுகள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் நம்ம டாய்லட் 30, இ டாய்லட் 90, பயோடாய்லட் 25, பிரைம் டாய்லட் 20, 3 எஸ் டாய்லட் 150 என மொத்தம்315 இடங்களில் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நம்ம டாய்லட்டு 11 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், ஒவ்வொரு இ டாய்லட், பயோ டாய்லாட் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், பிரைம் டாய்லட் 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 எஸ் டாய்லட் ஒப்பந்ததாரர்கள் அவர்கள் சொந்த செலவில் அமைத்து அவற்றை பராமரிக்க வேண்டும். அதற்கான மாத வாடகையாக 7,500 ரூபாய் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு செலுத்தி வருகிறது. ஒப்பந்ததாரர்கள் முறையாக தண்ணீர் ஊற்றி டாய்லட்டுகளை பராமரிக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் தண்ணீர் இன்றி அவை மூடியே கிடக்கிறது. இந்த திட்டம் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது.

நம்ம டாய்லட் கழிப்பறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே நேரத்தில் தலா 3 நபர்களும்,மாற்றுத் திறனாளி 1 நபர் என மொத்தம் 7 நபர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அவை இன்று பல இடங்களில் செயல்படாமல் காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. மேலும் பாதி கதவு மட்டுமே உள்ள டாய்லட் அமைக்கப்பட்ட இடங்களில் அதை ஆண்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. பல இடங்களில் நம்ம டாய்லட் நடைபாதை கடைகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. சென்னையை கிரேட்டர் சென்னையாக மாற்றப் போகிறோம் என அரசு கூறுகிறது. ஆனால் ஒரு மனிதனின் அவசியத் தேவையான கழிப்பறைகளை கூட இன்னும் முழுமையாக பராமரிக்க முடியவில்லை. இதனால் ஆண்கள் பல இடங்களில் சாலை ஓரத்திலும், மின்மாற்றி அருகிலும் சிறிநீர் கழிக்கின்றனர். இதனால் கடுமையான துற்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் மாநகராட்சி கழிப்பறைகளில் இலவசம் என பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், சிறுநீர் கழிக்க 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நம்ம டாய்லட் கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவும், கழிப்பறைகளில் பணம் வசூல் செய்வதைதடுக்கவும் மாநகராட்சி நிர்வாகமும், அரசும் முன்வருமா? ஆற்று நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் போட்டு மூடிய அமைச்சர் உள்ள மாநிலத்தில் மக்களின் வரிப்பணம் வீனாவது இயல்பானதே.

சிறுநீரை அடக்கி வைப்பதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் எஸ்.பி.லியோ ஜீவாஸ் என்பரிடம் கேட்டபோது, சிறுநீரை ஒருவர் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள்ளாக 4 முறை கழிக்க வேண்டும். அப்படி கழிக்காமல் அடக்கி வைத்தால் அவை சிறுநீர் பையில் தேங்கி, உடலளவில் பல பாதிப்புகள் ஏற்படும். உதராணமாக சிறுநீர் என்பது வெறும் நீரல்ல. உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றி, அவை உடல் ஆரோக்கியத்தை காக்கும் செயலாகும். சிறுநீரில் வெளியேறக் கூடிய கழிவுப் பொருட்களில் உப்பு என்ற கழிவுபொருள் அதிகமாக இருக்கிறது. நாம் சிறுநீர் கழிக்காமல் தேக்கி வைக்கும் போது, கழிவுப் பொருட்கள் சிறுநீர் பையில் தேங்குவதால், சிறுநீரின் தன்மையானது அடர்த்தியாகி விடுகிறது. இவ்வாறு நாள்பட சிறுநீர் பையில் தேங்குவது பின்னர் கல்லாக மாறி விடுகிறது.மேலும் சிறுநீரகம் சார்ந்த (யூரினரி இன்பெக்ஷன்) நோய் நுண்ணுயிர்க் கிருமிகள் வளர்வதற்கு ஏதுவாகிறது. இதனால் நாளடைவில் வயிற்றுவலி, குளிர் ஜூரம் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அம்பத்தூர் எஸ்.ராமு