tamilnadu

img

கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் போக்குகள் தடுக்கப்பட வேண்டும்: தமுஎகச மாநிலக்குழு

கல்வி நிறுவனங்கள் காவிமயமாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திருச்சிராப்பள்ளியில் செயல்படும் மத்தியக் கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்பக் கழகம் NIT இந்தியாவில் உள்ள 31 தேசியக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது இந்தியாவை அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் சிறந்த நாடாக உருவாக்க 1959 முதல் 1965க்குள் 14 மண்டலப் பொறியியல் கல்லூரிகளை உருவாக்கினார். அதில் ஒன்றாக 1964ல் திருச்சியில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம்  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ், இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான கூட்டுறவு முயற்சியாக நிறுவப்பட்டது. திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவான பிறகு இக்கல்வி நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வந்தது.  2005 முதல் இந்த நிறுவனத்தை தேசியத் தொழில்நுட்பக் கழகம் என்று பெயர் மாற்றி தேசிய அளவிலான துணைநிலைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக அங்கீகரித்து, தன்னாட்சியோடு செயல்பட வழிவகுத்தது.  இன்று வரை தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், மற்ற மாநிலங்களிலிருந்து இங்கு வந்து பயிலும் மாணவர்களுக்கும் இந்நிறுவனம் மிகவும் பயன்மிக்க அறிவியல் தொழிநுட்ப அறிவை  கற்பித்து வந்துள்ளது.

2014ல் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், அறிவியலுக்கு விரோதமான தங்களின் சொந்த நம்பிக்கைகளை, இது போன்ற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குள் வலிந்து திணிக்கும் போக்கு உள்ளது. ஒன்றிய ஆட்சியாளர்களின் சாதாரண தொண்டர் தொடங்கி, நாட்டின் பிரதமர் வரை அறிவியலுக்கு விரோதமான கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்.  இந்தச் சூழலில் திருச்சி NITயில் வருகிற 2026 பிப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய இரண்டு நாட்கள் "இந்திய நாட்டில் வளர்ந்து வரும் பல்துறை ஆராய்ச்சிப் போக்குகள் மற்றும் மேம்பட்ட வழிமுறைகள்" எனும் தலைப்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இக்கருத்தரங்கை Students for Holistic Development of Humanity (SHODH) என்னும் அமைப்புடன் இணைந்து நடத்துகிறது. இவ்வமைப்பு ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத் ABVB அமைப்பில் இணைக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் பெயரால் அறிவியல் தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கும் நிறுவனத்திற்குள் கொல்லைப்புறம் வழியாக காவிகள் நுழையும் வேலையை செய்கிறார்கள்.

இந்தக் கருத்தரங்கம் அந்நிறுவனத்தில் 60 ஆண்டுகால அறிவியல் செயல்பாட்டில் விழும் கரும்புள்ளிகாக இருக்கும். இக்கருத்தரங்கை தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனே நிறுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. அதைப் போல் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்களும், மாணவர்களும் இக்கருத்தரங்கை புறக்கணிக்கவும் தமுஎகச கேட்டுக் கொள்கிறது.