tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்கள் ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது  

போக்குவரத்து ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.  

போக்குவரத்து ஊழியர்களுக்கான 13ஆவது ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதன்பின் 14ஆவது ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை அதிமுக அரசு தொடங்கவில்லை. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை மேலும் தள்ளிப்போனது.  இதன்பின் பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.

அதனைதொடர்ந்து கடந்த ஜனவரி 5 மற்றும்  பிப்ரவரி 18 ஆகிய தேதிகளில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முன்னேற்றம் இல்லாததால் பிப்ரவரி 25 ஆம் தேதிமுதல் 27 ஆம் தேதிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் அரசு 1000 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கியது.  

இதனையடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவியேற்றது. ஆனாலும் பேச்சுவார்த்தையை தொடங்காமல் காலதாமதம் செய்து வந்தது‌. இதனையடுத்து சிஐடியு சார்பில் அக்.22 ஆம் தேதி தொடர் முழக்க போராட்டமும், நவ.22, 23 தேதிகளில் உண்ணாநிலை போராட்டமும் நடைபெற்றது.  இதனால் ஏற்பட்ட நிர்பந்தத்தின் காரணமாக 14ஆவது ஒப்பந்தத்திற்கான 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர்.29 (புதன்கிழமை) குரோம்பேட்டையில் தொடங்கியது.

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நிதித்துறை இணைச் செயலாளர் அருண் சுந்தர் தயாளன், தொழிற்சங்க தரப்பில் சண்முகம், கி.நடராஜன் (எல்பிஎப்), அ.சவுந்தரராசன், கே.ஆறுமுக நயினார் (சிஐடியு) உள்ளிட்ட 65 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.