சென்னை:
மறைந்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து, குடியிருப்பிற்கான ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், பழம்பெரும் நடிகரும், கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தஎம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய் ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒன்றினையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.அந்த உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக, வெள்ளியன்று (ஜூலை 2) தலைமைச் செயலகத்தில், எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், அவரது குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பிற்கான ஆணையினையும், ரூ.5 லட்சம் நிதி உதவியினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.