சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், செம்மலர் ஆசிரியருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' நூலுக்காக 2025 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் 'தோழர்' ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!
தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாதமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
