தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
முக்கிய அம்சங்கள் :
- தமிழின் பெருமையை பரப்பிட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.
- மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ. 1.33 கோடி ஒதுக்கீடு.
- பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
- தமிழர்கள் அதிகம் வாழும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
- கீழடி, தெலுங்கனூர், வெள்ளலூர், ஆதிச்சனூர், மணிக்கொல்லை, கரிவலம்வந்தநல்லூர், நாகை பட்டணமருதூரில் தொல்லியல் அகழாய்வு.
- ஈரோட்டில் ரூ.22 கோடியில் நொய்யல் அருங்காட்சியகம். ராமநாதபுரத்தில் ரூ.21 கோடியில் நாவாய் அருங்காட்சியகம்.
- எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.40 கோடியில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக் கூடம்.
- மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும்.
- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்குரூ.46,760 கோடி ஒதுக்கீடு. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு. ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும். ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு.ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு! ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு!
- தாயுமானவர் திட்டத்தின்கீழ் பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர, மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.
- UPSC முதன்மை தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களைப் போல உயர்கல்வி செல்லும் மாற்று பாலின மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
- மேலும், ஊர்க்காவல் படையில் மாற்று பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்.
- குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.
- 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு.
- கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிடவும், HVP தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக செலுத்த ரூ.36 கோடி ஒதுக்கீடு.
- ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்!
- சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்!
- வேளச்சேரியில் புதிய பாலம்! ரூ.310 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயனடைவார்கள்.