சென்னை:
போலி மருத்துவர் திருத்தணிகாச்சலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் பெருந்தொற்றை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக பொய் சொன்னதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டதை எதிர்த்து திருத்தணிகாச்சலத்தின் தந்தை கலியப்பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது திருத்தணிகாச்சலத்தின் தகுதி குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வைத்தியர் குடும்பத்தில் பிறந்து மருத்துவம் பார்த்தாலும், போலி மருத்துவர்தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக் காட்டினர்.
மேலும், பரம்பரை மருத்துவர் என வழங்கப்படும் சான்றிதழ்களுக்கும் எந்த மதிப்பும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தணிகாச்சலத்தின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்குறிஞர் கே.பாலு, "திருத்தணிகாச்சலம் கொரோனாவை எதிர்கொள்ள உதவும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் குடிக்கலாம் என பரிந்துரைத்தார். அவர் தவறான எந்த மருத்துவ ஆலோசனையையும் வழங்கவில்லை.குற்றப்பிரிவு காவல் துறை பதிந்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால், தேவையில்லாமல் உள்நோக்குடன் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பிரபாவதி ஆஜராகி கால அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.