சென்னை
நாட்டில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும், அதை பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இயல்பு நிலைக்கு மக்களை கொண்டு வரும் முனைப்பில் தான் உள்ளது. இதுவரை 3 கட்ட தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.
செப்டம்பர் 1-ஆம் தேதி 4-ஆம் கட்ட தளர்வுகள் முதல் அமலுக்கு வருகின்றன. இந்த 4.0 தளர்வுகளில் முக்கிய அம்சமாக மெட்ரோ ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினாலும், திரையங்குகள் திறப்பு பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது," திரையரங்குகளில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள். இதனால் தற்போதைக்கு திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே திரையரங்குகள் திறக்க வாய்ப்பு உள்ளது. ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க தனிச் சட்டம் கிடையாது என்றாலும், இந்த விவகாரம் குறித்து திரைத்துறையினரிடம் கலந்து பேசி இறுதி முடிவெடுக்கப்படும்" என அவர் கூறியுள்ளார்.