tamilnadu

img

அர்ச்சகர் ஆக பணிபுரிய சாதி தடையில்லை:சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஐ (எம்) வரவேற்பு!

அர்ச்சகர் ஆக பணிபுரிய சாதி தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற வழங்கியிருக்கும் தீர்ப்பை சிபிஐ (எம்) வரவேற்றுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு சாதியும் தடையாக இருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்று வழிசெய்யும் சட்டத்தினை டாக்டர் கலைஞர் அவர்கள் 1970ம் ஆண்டு நிறைவேற்றினார்கள். அச்சட்டத்தினை தொடர்ந்து செயல்படவிடாமல் சனாதன சக்திகள் இழுத்தடித்து வந்தனர். தற்போது அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அர்ச்சகர் நியமன உத்தரவுகளை வழங்கிய இப்போதும் இதற்கு தடை விதிக்க வேண்டுமென சொத்தை காரணங்களுக்காக சனாதன சக்திகள் வழக்குத் தொடுத்து இழுத்தடித்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் கோரிவரும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்ற கோரிக்கைக்கு வலுவும் சேர்க்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் தேவையான அளவு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை திறந்து பட்டயப்படிப்பு மட்டுமின்றி பட்டப்படிப்பையும் உருவாக்கி சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் பணிநியமனம் செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.