சென்னை:
தமிழகத்தில் 51 இடங்களில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் இந்த ஒத்திகை எதற்காக என்றால், தடுப்பூசி வரும்போது அதை எப்படி கையாள வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு செயல்படுத்துவதற்கான முன்னோட்டம் தான்” என்றார்.இந்த தடுப்பூசியை போடுவதற்காக முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக புற்றுநோயாளிகள், முதியோர்கள் உள்ளனர். தடுப்பூசி போடப்பட்டதும் சம்பந்தப்பட்டவரின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்படும். இதை எல்லாம் ஒத்திகை நடத்தி பார்த்தோம் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு 28 நாட்கள் இடைவெளியில் 2-வது தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட வருபவர்கள் அடையாள அட்டையுடன் வருவது அவசியம். தமிழகத்தில் 51 இடங்களில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான வசதிகள் உள்ளது. 46 ஆயிரம் மையங்களை இதற்காக தயார்படுத்தி வைத்துள்ளதாகவும் சுகாதாரதுறை செயலாளர் தெரிவித்தார்.