tamilnadu

img

தீக்கதிர் நிருபர் காவியன் மறைவு... சிபிஎம் இரங்கல்...

சென்னை:
தீக்கதிர் நிருபர் காவியன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தீக்கதிர் நாகை மாவட்ட நிருபரும், தமுஎகச நாகை மாவட்ட தலைவருமான தோழர் ந. காவியன் (77) மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் காவியன் கவிஞர், பாடலாசிரியர், ஓவியர், பேச்சாளர் என பன்முகத் திறன்கொண்டவர். கட்சியின் நாகை மாவட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசுவாசமிக்க ஊழியராக பணியாற்றியவர். தீக்கதிர் மாவட்ட நிருபராக நீண்ட காலம் பணியாற்றியவர். திருவாரூர், நாகை மாவட்டங்களில் தமுஎகச-வின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். கலை இரவுகளை தன்னுடைய நாவன்மையால் சுவையுற தொகுத்துத் தந்தவர். இதயத்தை தேடுகிறேன் என்ற கவிதை நூல் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

1944 ஆம் ஆண்டு ஒரத்தநாட்டில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த அவரது இயற்பெயர் பஷீர் அகமது. 1972 ஆம் ஆண்டுதந்தை பெரியார் தலைமையில் இவருக்கும்,சரோஜாவுக்கும் சாதி, மத மறுப்பு திருமணம் நடைபெற்றது. தன்னுடைய மகள், மகனுக்கும் சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்தவர். அவருடைய மறைவு தீக்கதிர் நாளேட்டிற்கும் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் மனைவி தோழர் சரோஜா, மகள் ஊடகவியலாளர் கவின்மலர், மகன் பத்திரிகையாளர் மலர்வண்ணன் ஆகியோருக்கு கட்சியின் சார்பில்ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பத்திரிகையாளர் பி.எஸ்.புருஷோத்தமன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.