சென்னை, ஏப்.15-மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை(ஏப்.16) மாலையுடன் ஓயும் நிலையில், வாக்குப்பதிவு மையத்திலிருந்து 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும், தட்டான்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அதே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் செவ்வாயன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. பிரச்சாரம் ஓய்ந்தபின் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்க அனுமதிக்கப்பட மாட் டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “வாக்குப்பதிவு மையத்திலிருந்து 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதே சமயம், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களி லும் செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவு வரை பரப்புரை செய்யக்கூடாது என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.சென்னை எம்.எல்.ஏ., விடுதிகளில் வருமான வரித்துறை சோதனை குறித்து தற்போது வரை எந்த தகவலும் தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித் துறை வழங்கவில்லை என்றும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.