tamilnadu

img

நெருக்கடி நிலையை அறிவித்தேவிட்டீர்களா

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கைக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகம் செய்யவிடாமல் சேலம் தமுஎகச நிர்வாகிகளை மிரட்டி, தடுத்து நிறுத்திய காவல்துறைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி, பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய கல்விக்கொள்கை வரைவறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்மீது கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளின் வற்புறுத்தலால் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்தக் கல்விக்கொள்கைக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள் இக்கல்வி கொள்கையை முழுவதுமாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றன.

இந்தக்கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்களைக் குறிப்பிட்டு துண்டறிக்கை தயாரித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் எங்கள் அமைப்பினர் வினியோகித்து வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்ட தமுஎகச சார்பில் 01.08.19 மாலை 5 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக மாவட்டச் செயலாளர் நிறைமதி, மாவட்டக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் துண்டறிக்கையை மக்களிடம் வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சேலம் மாநகர காவல்துறையினர், "அனுமதியின்றி, அதுவும் மத்திய அரசை எதிர்த்த துண்டறிக்கையை மக்களிடம் கலெக்டர் அலுவலகம் முன்னாடியே தருவதா?" என அவர்களை தடுத்ததுடன், அவர்களிடமிருந்த துண்டறிக்கைகளையும் பறித்துக்கொண்டு, "உங்கள் மீது வழக்குத் தொடருவோம்" என எச்சரித்துவிட்டு முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் கட்டாயப்படுத்தி வாங்கிச் சென்றுள்ளனர்.

சேலம் போலீசாரின் இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். ஜனநாயக முறைப்படி மக்களிடம் துண்டறிக்கை வழங்கியவர்களை, அவ்வாறு வழங்கக்கூடாது என்று தடுப்பதும், துண்டறிக்கைகளை பறித்துச் செல்வதும், வழக்கு போடுவோம் என்று மிரட்டுவதும் அப்பட்டமான கருத்துரிமை மீறலாகும். இந்த சட்டவிரோதப் போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது.

இதுபோன்று தான்தோன்றித்தனமான தடைவிதிப்பையும் தலைகொழுத்த போலிஸ் அராஜகங்கங்களையும் பார்க்கும்போது “நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தேவிட்டீர்களா ஆட்சியாளர்களே?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இத்தகைய நிலையை காவல்துறை கைவிட வேண்டும் என்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் இத்தகைய போக்கினை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.