tamilnadu

img

பாதுகாப்புத் துறை தனியார்மயம் தீவிரவாதத்திற்கு உதவியாக அமையும்

அம்பத்தூர்:
பாதுகாப்புத் துறை தனியார்மயமானால் அது தீவிரவாதத்திற்கு உதவியாக அமையும் என டி.கே.ரங்கராஜன் எம்.பி.கூறினார்.படைத்துறை தொழிற்சாலையை கார்ப்பரேஷனாக மாற்றும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங் களின் சார்பில் ஒரு மாத வேலை நிறுத்தம் நாடுமுழுவதும் செவ்வாயன்று (ஆக. 20) தொடங்கி5 நாட்களாக நடைபெற்று வருகிறது.ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலையில் போராடும் தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சந்தித்தார். பின்னர், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்திப் பேசுகையில், ரயில்வே, சேலம்ஸ்டீல், பி.எஸ்.என்.எல்., பாதுகாப்புத் துறை எனஅனைத்து அரசுத் துறைகளையும், பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது” என்றார்.

தனியார் நிறுவனங்கள் துப்பாக்கி, டேங்க், ஹெலிகாப்டர் உள்ளிட்ட எந்த ராணுவத்தளவாடங்களை வேண்டுமானாலும் உற்பத்திசெய்து கொள்ளலாம். அரசு துறை நிறுவனங்களையோ, நிலங்களையோ நேரடியாக விற்பனை செய்ய முடியாது. எனவேதான் பாதுகாப்புத் துறையை முதல்கட்டமாக கார்ப்பரேஷனாக மாற்றுவது, பின்னர் பங்குகளை தனியாரிடம் விற்பனை செய்வது என மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமானால் சமூக பாதுகாப்பு இருக்காது. இடஒதுக்கீடு இருக்காது. டி.வி.எஸ். போன்ற தனியார் தொழிற்சாலைகளில் இட ஒதுக்கீடு கேட்க முடியுமா? முடியாது. ஆனால் அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு பெற முடியும். தனியார்மயமானால் போராடிபெற்ற உரிமைகள் பறிபோகும். பாதுகாப்புத் துறை தனியார்மயமானால் அது தீவிரவாதத்திற்கு உதவியாக அமையும். தனியார் துறை என்றாலே வியாபாரம்தானே. எனவே தனியார்நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்களை தீவிரவாதிகளுக்கு விற்க மாட்டார்களா என்றும் டி.கே. ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவதளவாடங்களை உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி தனியார் துறைக்கு வழங்கும் முடிவை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றால் நாட்டின் பாதுகாப்பு என்னவாகும்? பாஜகவின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ். உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராட்ட களத்தில் நிற்பதைப் போல், இந்த அரசின் தவறான கொள்கைகளை மக்களிடத்தில் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துச்செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் நித்தியானந்தம் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் செயல் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் ஆவடி எச்.வி.எப்.  தலைவர் ஜெ.முரளிதரன், பொதுச் செயலாளர் கு.ஆடலரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.