புதுதில்லி:
எஸ்சி/எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை ஐஐடிநிர்வாகங்கள் முறையாக அமலாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என மாநிலங்களவையில் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்.இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்து சிறப்பு கோரிக்கையை மாநிலங்களவையில் எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன்,“ இந்தியாவில் உள்ள 10 ஐஐடிக்கள் மட்டுமே 2013-14 முதல் 2017-18 வரையிலான ஆண்டறிக்கைகளை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளன. இந்த நிறுவனங்களின் ஆராய்ச்சித் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு சட்டரீதியாக வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை பெருமளவிற்கு இவை உதாசீனப்படுத்தியுள்ளன என்பது இந்த அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது. மீதமுள்ள 13 ஐஐடிக்கள் தங்களது ஆண்டறிக்கையில் ஆராய்ச்சித் திட்டங்களில் சேர்க்கப்பட்டவர்கள் குறித்த பிரிவு வாரியான விவரங்களை தெரிவிக்கவில்லை.” என அதிர்ச்சிகரமான விபரங்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது:இந்த ஆண்டறிக்கைகளிலிருந்து கிடைத்துள்ள விபரங்களின்படி ஆராய்ச்சித் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 7 முதல் 10 சதவிகிதமும், பழங்குடி பிரிவினருக்கு 0 முதல் 1 சதவிகிதமும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2006ஆம் ஆண்டின் மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) குறித்த சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த நிறுவனங்களில் முறையே 15 சதவிகிதம், 7.5 சதவிகிதம், 27 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு நேர்மாறானதாக இந்த நிலைமை உள்ளது.
2008ம் ஆண்டிலிருந்து இந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தொடங்கி 2014ம் ஆண்டிற்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும் என்றும் இந்தச் சட்டம் மத்திய கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. எனினும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகள் கழிந்தபிறகும் கூட அதன் விதிமுறைகள் அமலாக்கப்படவில்லை என்பது மிகவும் மோசமான சூழலாகும்.2019ம் ஆண்டில் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பதவிகளில் இடஒதுக்கீடு ) சட்டத்தை பாஜக கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இது தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினர்; சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்; பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஆசிரியர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டமாகும்.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி நாட்டிலுள்ள பல்வேறு ஐஐடிக்களிலும் நிரப்பப்பட்ட 6,043 ஆசிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு வெறும் 2.3 சதவிகிதம், பழங்குடியினர் பிரிவினருக்கு வெறும் 0.3 சதவிகித இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டத்தினை கறாராக அமல்படுத்தாமல், வாழ்க்கையில் ஓரங்கப்பட்ட பிரிவினருக்கு ஆசிரியர் பதவிகளில் இடஒதுக்கீட்டை வழங்குவதற்காக மேலும் ஒரு சட்டத்தை இயற்றுவதென்பது பொருளற்றதாகவே இருக்கும்,எனவே 2006ஆம் ஆண்டு சட்டத்தை கறாராக அமல்படுத்தும் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தும் வகையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.