சென்னை,ஏப்.23-அஞ்சல்துறையில் சிறந்த தொழிற்சங்கத் தலைவராகவும் முற்போக்கு சிந்தனையாளராகவும் இருந்து வழிகாட்டிய தோழர் என்.கோபால கிருஷ்ணன் தலைமைப் பண்பிற்கு முன்னுதாரண மாகவும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்தவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் பிரிவு -3ன் முன்னாள் அகில இந்திய செயல் தலைவராக பணியாற்றிய தோழர் என்.கோபாலகிருஷ்ணன் (62) சென்னையில் ஞாயிறன்று காலமானார். வேப்பேரி வல்லம் பங்காரு தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் என்.கோபாலகிருஷ்ணன் உடலுக்கு செவ்வாயன்று (ஏப்.23) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தியபோது இதனை அவர் தெரிவித்தார்.கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், அஞ்சல் 3 சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.வி.ஸ்ரீ தரன், என்.எப்.பி.இ சம்மேளன மாநில உதவி பொதுச்செயலாளர் ரகுபதி, அஞ்சல் 3 சங்க அகில இந்திய தலைவர் ஜெ. ராமமூர்த்தி, செயலாளர் வீரமணி, அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.கண்ணையன், மாநில உதவித்தலைவர் எம்.ஆர்.மீனாட்சி சுந்தரம்,தபால் காரர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.சுரேஷ்பாபு, தபால்காரர்கள் சங்கத்தின்முன்னாள் மாநிலச் செயலாளர் கே.சிவராமன், ஜி.டி.எஸ் சங்க உதவி பொதுச்செயலாளர் கே.சி.ராமச்சந்திரன், ஜெ.சி.எம் இலாகா குழு முன்னாள் உறுப்பினர் கோவை கருணாநிதி, சிபிஎம் மாநிலக்குழு அலுவலக செயலாளர் ராஜசேகரன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தலைவர் என்.எல்.சீதரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத்தலைவர் ஆர்.ஜோதி உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் சென்னை ஓட்டேரி மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இடதுசாரி சிந்தனையாளர்
ஈரோட்டில் அஞ்சல் நிலைய எழுத்தராக பணியைத் துவக்கிய தோழர் என்.கோபால கிருஷ்ணன், சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையத்தில் அஞ்சலக தலைவராக பணிசெய்த போது அஞ்சல்துறை ஊழியர்களைத் தொழிற்சங்கத்தின்பால் ஈர்க்க முக்கிய காரணமாக இருந்தார். தனது இறுதிக்காலம் வரை இடதுசாரி சிந்தனையாளராக இருந்து இயக்கப்பணியாற்றினார். அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்திற்கும் ஓய்வூதியர் தொழிற்சங்க இயக்கத்திற்கும் பேரிழப்பு என்று பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர். மறைந்த என்.கோபாலகிருஷ்ணனுக்கு பத்மினி என்ற மனைவியும் டாக்டர். அக்சயா என்ற மகளும் உள்ளனர்.