tamilnadu

img

தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்தக் கூடாது

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக கருத்தரங்கில் வலியுறுத்தல்

சென்னை, பிப். 7- தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று அறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். “இந்தியமே எழுக, குடியுரிமைக் காப்போம், குடியரசைக் காப்போம்” எனும் முழக்கத்தோடு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் வியாழனன்று (பிப்.6) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது

ஒத்துழையாமை

இந்நிகழ்வில் பேசிய நீதியரசர் து.அரிபரந்தாமன், “11 மாநிலங்கள் என்பிஆர் பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளன. தமிழக அரசும், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு என்பிஆர் பணிகளை நடத்த அனுமதிக்க கூடாது” என்றார். “இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்கிறார் ரஜினி. இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? குஜராத்தில் 2ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது அதுகுறித்து பேசினாரா? அறிவுரை என்ற பெயரில் மாணவர்களை மிரட்டுகிறார். குடியுரிமையே பறிபோகும்போது எப்ஐஆர் ஒரு பிச்சனையே இல்லை. ரஜினியின் கருத்துக்கு அவரது நண்பர் கமலஹாசன் என்ன சொல்லப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பினார். “என்பிஆர், என்ஆர்சி இஸ்லாமியர்களை மட்டுமல்ல இந்துக்களையும், ஏழை, தலித் மக்களையும் பாதிக்கும். சிஏஏ வழக்கை உச்சநீதிமன்றம் எப்போது விசாரிக்கும் என்று தெரியாது. காந்தியும், அம்பேத்கரும் சட்டம் படித்தவர்கள். ஆனால், நீதிமன்றம் செல்லுங்கள் என்று ஒருபோதும் சொன்னது இல்லை. சமூக பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தால் தீர்வு கிடைக்காது. அறப்போராட்டங்களாலும், ஒத்துழையாமையாலும்தான் வெற்றிபெற முடியும். எனவே, என்பிஆர் கணக்கெடுப்புக்கு மக்கள் தகவல்களை தர வேண்டாம்” என்று அரிபரந்தாமன் கூறினார்.

குடியுரிமையற்றவர்கள்?

மோடி அரசின் காஷ்மீர் அணுகுமுறையை எதிர்த்து தனது மாவட்ட ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் பேசுகையில், “இந்தியாவில் பாசிசத்தை கொண்டு வர ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகளை சிதைக்கின்றனர். பல்கலைக் கழகங்கள், சுயேட்சையான அமைப்புகளை சீர்குலைத்து, தேசம், தேசவிரோதி என மக்களை திரட்டுகின்றனர்” என்று குறிப்பிட்ட அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளனர். அதற்கெதிராக ஏற்பட்டுள்ள மக்களின் ஒற்றுமையால் அரண்டு உள்ளனர். 30 பல்கலைக் கழக மாணவர்கள் சிஏஏ உள்ளிட்டவைக்கு எதிராக போராடி வருகின்றனர்” என்றும் கூறினார். என்பிஆர் கணக்கெடுப்பில் எனது ஆவனங்களை சமர்ப்பிக்க மாட்டேன் என்று உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறிய அவர்,“என்பிஆர், என்ஆர்சி அமல்படுத்தப்பட்டால் இந்தியாவில் 30-40 விழுக்காடு பேர் குடியுரிமையற்றவர்களாக மாற்றப்படுவோம். போராடுவது தேசதுரோகமல்ல, வாய்மூடி அமைதியாக இருப்பதுதான் தேசதுரோகம்” என்றார்.

என்பிஆர் எதற்கு?

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பேரா.அருணன் குறிப்பிடுகையில், “மதமோதலை தூண்டும் வகையில் பேசும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத்தை போன்று இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் உள்ளது” என்றார். “மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய மனித சங்கிலியில் 40 லட்சம் பேர் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சிகள் நடத்தும் கையெழுத்து இயக்கம் ஆட்சியாளர்களை கலகலக்கச் செய்துள்ளது. எனவே, ரஜினியை இறக்கிவிட்டுள்ளனர். ரஜினிக்கே பிறப்பு சான்றிதழ் இருக்காது. ஆதார் இருக்கும்போது என்பிஆர் எதற்கு? என்று முழங்குவோம்” என்றும் அவர் கூறினார்.

வெவ்வேறல்ல...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், “வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. தற்போது அதற்கு விதிமுறைகள் வகுக்கக்கப்பட்டுள்ளது. விதி-3ன் படி என்ஆர்சி தயாரிக்க வேண்டுமென்றால், விதி 3 (உபவிதி 4)ன்படி என்பிஆர் தயாரிக்க வேண்டும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதற்கெதிராக திரைக்கலைஞர்கள் உரத்து குரலெழுப்ப வேண்டும். தமிழக அரசு என்பிஆர் பணிகளை அனுமதிக்க கூடாது” என்றார்.

மாணவர்கள் தொடங்கியது...

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, “சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் தூண்டவில்லை, மாணவர்கள் தன்னிச்சையாக போராடுகிறார்கள். இந்தச் சட்டங்கள் குறித்து மாற்றிமாற்றி பேசி அமைச்சர்கள் மக்களை குழப்புகின்றனர். தமிழக முதலமைச்சருக்கே பிறந்தநாள் சான்றிதழ் இல்லை. அவரது பெற்றோருக்கு எங்கே இருக்கப்போகிறது? என்பிஆர்-படி பார்த்தால் முலமைச்சரும் குடியுரிமையற்றவர்தான். எனவே, என்பிஆர் பணிகளை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.