சென்னை:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க கோரி திங்களன்று (ஜன.11) சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் சுமார் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்தி குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும்.அகவிலைப்படி, மருத்துவப்படி, மருத்துவக் காப்பீடு, இலவச பஸ்பாஸ், குடும்ப ஓய்வூதியம், குடும்ப நலநிதி, ஈமக்கிரியை செலவு உள்ளிட்டவைகளை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தினிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைப்பின் பொதுச் செயலாளர் இ.மாயமலை, “கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சத்துணவுத் துறை அமைச் சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க ஒப்புக் கொண்டார். சங்க நிர்வாகிகளை அழைத்துச் சென்று முதலமைச்சருடன் பேச வைப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்படி நடக்கவில்லை. ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக முதலமைச்சருக்கு 5 முறை கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றார்.காவல்துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்து மோப்ப சக்தி இழந்த நாய்களுக்கு மாதம் 6 ஆயிரம் வழங் கப்படுகிறது. ஆனால் 38 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் தருகின்றனர். எனவே, தமிழக அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்க்காவிடில் பிப்.16 முதல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் சரவணவேல்ராஜை சந்தித்து மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர், கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.இந்தப் போராட்டத்திற்கு சங்கத் தின் மாநிலத் தலைவர் ந.நாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் இரா.நம்பிராஜன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.நூர்ஜகான், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.டெய்சி உள்ளிட்டோர் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். ஓய்வூதியர் சங்கத்தின் பொருளாளர் ஜி.அனந்தவல்லி நன்றி கூறினார்.