tamilnadu

img

சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாகக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், ‘செம்மலர்’ இதழின் ஆசிரியருமான எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக எழுதி வரும் தமிழின் சிறந்த எழுத்தாளரான ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள், கட்டுரைகள், குழந்தை இலக்கியம் மட்டுமல்லாமல், இடதுசாரி அரசியல் சார்ந்த பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான இவரின் "அரசியல் எனக்குப் பிடிக்கும்" நூல், இடதுசாரி அரசியலை எளியோருக்கும் புரியும் வண்ணம் விளக்குவதாகும். "ஜிந்தாபாத் ஜிந்தாபாத்" நூல் ஒரு இலக்கியவாதியின் தொழிற்சங்க அனுபவத்தைச் சொல்லும் நூலாகும். இந்த வரிசையில் சமீபத்தில் இவரது எழுத்தில் வெளிவந்த "திருப்பியடித்த வரலாறு", ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டச் செங்கொடி இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றை 1000 பக்கங்களில் பதிவு செய்த மிகச்சிறந்த வரலாற்று ஆவணமாகும்.

இவர் எழுத்தாளராக மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக மூன்று முறை செயல்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சியக் கல்வியை எளிய மொழியில் வகுப்பெடுக்கும் சிறந்த ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய பாஜக-வின் அரசியல் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்ட இவ்விருது, பலரின் கண்டனக் குரல்களுக்குப் பின் தற்போது வெளிவந்துள்ளது.

தனது எழுத்தில் எப்போதும் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டத்தில், அழகியல் குறையாமல் தொடர்ந்து எழுதி வரும் ச. தமிழ்ச்செல்வன், தற்போது விருது பெற்றுள்ள "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" நூலையும் அதே கண்ணோட்டத்தில் எழுதி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.