சென்னை, ஏப். 18-தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபலங்கள் பலரும் சென்னையில் வசித்து வருகின்றனர். இதையடுத்து அங்குள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில், தங்களது வாக்கைப் பதிவு செய்தனர். அவர்களுக்கு வாக்கு மையங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவது வழக்கம். அதேசமயம் சாமானிய மக்கள் அலட்சியப்படுத்தப் படுவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக நடிகை திரிஷா வாக்களிக்க சென்றுள்ளார். அவருடன் பாட்டியும் சென்றிருந்தார். அவர் சக்கர நாற்காலியில் அமர வைத்து, அழைத்து வரப்பட்டார். இதையடுத்து பூத் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். அப்போது வாக்களிக்கும் மையத்தின் நுழைவாயில் முன்பு, திரிஷாவின் கார் நிறுத்தப்பட்டது. இதனால் மற்றவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மாற்றுத் திறனாளியான மூதாட்டி ஒருவர், மூன்று சக்கர இருக்கையில் சாலையில் காத்திருக்க நேரிட்டது. திரிஷாவின் கார் வாக்கு மையத்திற்கு உள்ளேயும் நகர்த்தப்படவில்லை. பூத் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மூதாட்டிக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. அவர்கள் திரிஷாவுடன் செல்பி எடுக்கவும், உதவிகள் செய்தும் கொண்டிருந்தனர். இதுகுறித்து பேசிய மூதாட்டி ரங்கநாயகி(81), பிரபலங்களுக்கு அளிக்கப்படும் சலுகையில் பாதி கூட எனக்கு கிடைக்கவில்லை. வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கவும், வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், காலை 8 மணிக்கு வாக்கு செலுத்த வந்தேன். அப்போது என்னை திரும்பி சென்று, பூத் சிலிப் வாங்கி வரச் சொன்னார்கள். பின் வீட்டிற்குச் என்று, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு, எனது மகனுடன் மீண்டும் வந்தேன் என்று கூறினார். பூத்திற்குள் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து புகார்கள் அளித்து, அவற்றை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.