சென்னை, ஜூலை 11- தேனாம்பேட்டையில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெருநகர சென்னை மாநகராட்சி, 117வது வட்டம், தேனாம்பேட்டையில் திரு.வி.க.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. 1978ம் ஆண்டு கட்டப்படட இந்த குடியிருப்பு 3 மாடிகளை கொண்டது. 23 பிளாக்குகளில் 636 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் வசிக்கும் மக்கள், குப்பை போடுவதற்கு என்று கட்டிடத்தோடு இணைந்த பாதை ஒன்று பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்கும். அதன்வழியாக போடப்படும் குப்பை தரைக்கு வரும். இதுபோன்று ‘கியூ’ பிளாக்கில் உள்ள குப்பை போடும் அந்த பாதை வெள்ளியன்று (ஜூலை 10) இரவு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் அம்பிகாபதி கூறுகையில், “42 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் வலுவிழந்து, விரிசலைந்துள்ளன. அதன்விளைவாக கியூ பிளாக் பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அனைத்து பிளாக்குகளிலும் வீடுகள் விரிசலடைந்துதான் உள்ளது. வீடுகள் எப்போது இடிந்து விழும் என்று தெரியாமல், பதற்றத்தோடு மக்கள் உள்ளனர். சென்னையில் வலுவிழந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. அதேபோன்று, திரு.வி.க.நகர் குடியிருப்பையும் இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.