tamilnadu

தரமில்லா குடிசைமாற்று வாரிய குடியிருப்பு ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை.... சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ வலியுறுத்தல்....

சென்னை:
தரமில்லாமல் பன்னடுக்கு கட்டடம் கட்டிய முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் நான்காம் நாள் நிகழ்ச்சியின்போது சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எழும்பூர் தொகுதி திமுக உறுப்பினர் பரந்தாமன் கொண்டுவந்தார்.அப்போது அவர் பேசுகையில், “சென்னை புளியந்தோப்பில் 9 மாடிகள் கொண்ட கே.பி.பார்க் (கேசவப்பிள்ளை பூங்கா) குடியிருப்பு மிக குறைந்த காலத்திலேயே 17 மாதங்களில் கட்டப்பட்டுள்ளது. தொட்டாச்சிணுங்கி போல் கட்டடத்தை தொட்டாலே சிமெண்ட் உதறும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு அந்த குடியிருப்பை அதிமுக கட்டியுள்ளது.

இதுமட்டுமல்ல நாமக்கலில் ஒரு மருத்துவமனை கட்டிக்கொண்டிருக்கும் போதே சரிந்துவிழுந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தடுப்பணை கட்டப் பட்டது. அது, அப்போது பெய்த மழையில் அடித்து செல்லப்பட்டது. மதுரையில் கட்டப் பட்ட பாலம் திறப்பு விழாவின்போது இடிந்துவிழுந்தது. எனவே, கடந்த ஆட்சியில் தமிழ் நாட்டில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல் வம் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனம், ஒப்பந்ததாரர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “ கே.பி. பார்க் குறித்த செய்தி கிடைத்தது உடனே சென்று ஆய்வு நடத்தினோம். இதுகுறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த காலத்தில் கட்டப் பட்ட கட்டங்களில் தரமற்றதாக இருந்தால், கட்டுமானப் பணியில் முறைக்கேடு உறுதி செய்யப்பட்டால் யார் தவறு செய்தாலும் அரசு பார்த்துக் கொண்டிருக்காது. உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.