சென்னை:
மத்திய பட்ஜெட் சிறு-குறு தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இல்லை என்று அந்த தொழில்சார்ந்த சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு சிறு குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.கண்ணன் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் நிதி நிலைஅறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் இருந்தாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உற்பத்தி, அந்நிய செலவாணி ஈட்டக் காரணமாக உள்ள சிறு குறுந்தொழில் துறையினரின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. சிறு குறுந்தொழில் துறையினர் உதிரி பாகங்கள் தயாரிப்போர் வசூலிக்கின்ற ஜி.எஸ்.டி வரிக்கான கணக்கை தாக்கல் செய்வது 1 மாதத்தில் இருந்ததை 3 மாதமாக உயர்த்தியிருப்பதும், ரூ.1.5 கோடி வரை வரி செலுத்த வேண்டும் என்பதை 5 கோடியாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் குறுந்தொழில் துறையில் உதிரிபாகங்கள் தயாரிப்போருக்கு 18 விழுக்காடு வரி விதித்திருப்பதால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளன. எனவே 18 விழுக்காடு வரியை5 விழுக்காடாக குறைக்க வேண்டும். பொதுத்துறையில் உள்ள உதிரிபாகங்கள் குறுந்தொழில் முனைவோருக்கு கிடைக்க வேண்டும். அதற்கு நியாயமான கட்டணம், மூலப் பொருட்கள் விலையேற்றம் வங்கிக்கடனுக்கான வட்டி குறைப்பு, குறுந்தொழிலுக்கான தொழிற்பேட்டைகள் போன்றவைகளுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. துறைமீதான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் விளக்கம் அளிக்கும் போது மேற்கூறிய கோரிக்கைகளை அறிவிப்பாக வெளியிடவேண்டும்.
பிளாஸ்டிக் சங்கம்
தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக்சங்கத்தின் (டான்பா) தலைவர்ஜி.சங்கரன் கூறுகையில், தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக்சங்கம் (டான்பா), பிவிசிபிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை 7.5 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக மத்திய நிதி நிலை அறிக்கையில் உயர்த்தியிருக்கிறது. மேலும் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப, சிறு, குறு நிறுவனங்கள்மற்றவர்களுடன் போட்டியிட அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தசலுகைகளையும் எதிர்பார்க்கக்கூடாது என சிறு, குறு நிறுவனங்களுக்கு அறிவுரை சொல்லும் மத்தியஅரசு ஏகபோகமாக, செயல்படும்உள்நாட்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்குகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு, இறக்குமதி வரியை மேலும் உயர்த்துவது என்பது,ஏற்கனவே நலிந்து கொண்டிருக்கும் சிறு, குறு பிளாஸ்டிக் நிறுவனங்கள் முற்றிலுமாக அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்றார்.
சாடியா
தமிழ்நாடு சிறு தொழில்முனைவோர் சங்கத்தின் (சாடியா)முன்னாள் தலைவர் கே.கிருஷ்ணசாமி கூறுகையில், மத்தியபட்ஜெட்டில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் முன்னேற்றத்திற்கான எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. வளர்ச்சிகானநிதி ஒதுக்கீடும் இல்லை. சிறு குறுந்தொழில் துறையினர் ஒருலட்ச ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே இ.பில் எடுத்து விற்பனை செய்ய வேண்டும். இனிமேல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வதாக இருந்தால் கூட இ.பில் வரும்.
கடந்த காலங்களில் சிறுநிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் என அனைவருக்கும் வருமான வரி 30 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு 250 கோடிக்கு மேல் வணிகம் செய்பவர்களுக்கு 30 விழுக்காடு வருமான வரியில் இருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் 400 கோடிக்கு மேல் வணிகம் செய்பவர்களுக்கு 25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறு குறுந்தொழில் செய்வர்கள் 30 விழுக்காடு வரியில் இருந்து எந்த சலுகையும் வழங்கவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் தப்பி பிழைத்து வரும் சிறுகுறுந் தொழிற்சாலைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.