tamilnadu

img

பணி நிரந்தரம் கோரி பிப்.2 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு ....

சென்னை:
பணிவரன்முறை செய்யக்கோரி பிப்.2 அன்று சென்னையில் டாஸ்மாக் ஊழியர் களை காத்திருப்பு போராட்டத்தை தொடங்குகின்றனர்.

இது தொடர்பாக டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆ.இராசவேல் (எல்பிஎப்),கே.திருச்செல்வன் (சிஐடியு) ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) 2003 ஆண்டிலிருந்து மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இவற்றில் தற்போது தற்காலிக தொகுப்பூதிய ஊழியர்களாக 26 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 18 வருடமாக பணிபுரியும் இந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை. பணிவரன்முறையும் செய்யப்படவில்லை. தமிழக அரசின் வருவாயில் 5ல் ஒரு பகுதி இந்த தொழிலாளர்கள் மூலமே அரசு ஈட்டுகிறது.10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அரசின் கொள்கை முடிவு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் மூடப்பட்ட  கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு முறையான பணி வழங்காமல் உள்ளனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் அயல்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தம் அடைப்படையில் அலுவலர்கள் நியமிக்கப்படுவதால் ஊழல் முறைகேடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பணியிட மாறுதல், பணி நியமனம், கடை ஆய்வு, கடை தணிக்கை என ஒவ்வொரு நிர்வாகப் பணிகளிலும் பெருமளவு முறைகேடு நடைபெறுகிறது.

டாஸ்மாக் தலைவரும் துறை அமைச்சர் அலுவலக  தலையீடு, ஆளும்கட்சியினரின் ஆதிக்கம் நிர்வாகத்தை சீரழிக்கிறது. சட்டவிரோத மதுக்கூடங்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. அவ்வபோது டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர்.கொரோன ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தினசரி 120 கோடி ரூபாய் வருவாயை டாஸ்மாக் ஊழியர்களே ஈட்டித் தருகின்றனர். இப்பினும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு அலட்சியம் செய்து வருகிறது.எனவே, நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டத்தில் பணி வரன்முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி பிப்.2 அன்று வள்ளுவர்  கோட்டத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங் கும். அந்தப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற் பார்கள்.இந்த சந்திப்பின்போது கே.பி.ராமு (சிஐடியு), ஜி.வி.ராஜா (அரசு பணியாளர் சங்கம்), ஜி.சண்முகையா பாண்டியன் (டியுசிசி), ஜி.சிவா (விற்பனையாளர் சங்கம்), அண்ணாதுரை (எஸ்சி, எஸ்டி சங்கம்), பி.எம்.மணி கண்டன் (ஏஐடியுசி), அ.தனசேகரன் (எல்எல்எப்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.