tamilnadu

img

ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு

சென்னை:
ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, வரும் ஜூன் 3ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஏப்ரல் மாதக் கடைசியில் விடுமுறை அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்ததும், மீதமுள்ள வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். இதனால், ஏப்ரல் மாத பிற்பகுதியில் மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றதை முன்னிட்டு, அதற்கு ஒரு வார காலம் முன்னதாகவே பள்ளிகளில் தேர்வுகளை முடித்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியோடு பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வரும் ஜூன் 3ஆம் தேதியன்று விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், வெயிலின் கடுமை அதிகமுள்ளதால் இதில் மாற்றமிருக்கும் என்று எதிர்பார்ப்பு உண்டானது. தற்போது வரை, தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால், மேலும் 2 வாரங்கள் விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், விடுமுறையைத் தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என்று வெளியான செய்திகள் தவறு என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.