சென்னை:
தமிழ்செம்மொழி ஆய்வு நிறுவனத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டிலேயே முதன் முதலாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ்மொழி குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட தமிழ் செம் மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தை புதிதாக உருவாக்கவுள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா (பி.பி.வி.) பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.தமிழ் செம்மொழி ஆய்வினை மேலும் செழுமைப்படுத்துவதற்கு தமிழ்செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, இந்நிறுவனத்திற்கான இயக்குநரை நியமிக்காமல் நீண்ட காலம் காலியாக வைத்திருந்தது. தமிழ் தெரியாதவர்களை இயக்குநர்களாக நியமிப்பது, இந்நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தாமதப்படுத்துவது போன்றவைகளை மேற்கொண்டு வந்துள்ளது. தற்போதுஇந்த நிறுவனத்தையே ஒழித்துக்கட்டி மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்தை பி.பி.வி. பல்கலைக்கழகமாக மாற்றி, அதோடு தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் தனித்தன்மையை இழந்து பல்கலைக்கழகத் தின் ஒரு துறையாக மாற்றப்படும் ஆபத்துஏற்படும்.
பேச்சு மொழியாக இல்லாத சமஸ் கிருத மொழிக்கு பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், பல ஆய்வு நிறுவனங்களும் மத்திய அரசின் நிதிஒதுக்கீடும் உள்ள நிலையில், தமிழ் செம்மொழிக்கு இருக்கும் ஒரே ஆய்வு நிறுவனத்தையும் ஒழித்துக்கட்டும் முயற்சி, தமிழ் உள்ளிட்ட இதர மொழிகள் மீதுபாஜக அரசு கொண்டுள்ள வன்மத்தைஎடுத்துக்காட்டுகிறது. “ஒரே நாடு, ஒரேமொழி” என்ற கோட்பாட்டை அரங்கேற் றுவதற்கு பாஜக அரசு வெறித்தனமாக செயல்படுவதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கையாகும்.எனவே, தமிழ் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தை தொடர்ச்சியாக சென்னையில் செயல்படுத்துவதுடன், அதன் ஆய்வுக்கு தேவையான நிதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
*************************************
தமிழ் கல்வெட்டுகளுக்கான இயக்குநரகத்தை சென்னையில் அமைத்திடுக!
இந்திய நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 40 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளாகும். மொழி, வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்வதில் கல்வெட்டுகள் மிக முக்கியமான பங்கினைஆற்றி வருகின்றன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கை உள்ள தமிழ் கல்வெட்டுகளின் மை படிகளை பாதுகாக்கும் பணியை மைசூரில் உள்ள கல்வெட்டுத்துறை இயக்குநரக அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் மைசூருக்கு சென்றுதான் கல்வெட்டு படிகளை பார்வையிட முடியும் அல்லது மைசூரில் உள்ள அலுவலகத்திற்கு எழுதி அந்த படிகளை பெற்று தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், பல நேரங்களில் அக்கல்வெட்டு படிகளை பெற முடியாத அல்லதுமிகத் தாமதமாக பெரும் நிலைமை உள்ளதால், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பெரும்சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஏற்கனவே இந்த இயக்குநரகம் ஊட்டியில் செயல்பட்டு வந்தது. பின்னர் அது மைசூருக்கு மாற்றப்பட்டுள்ளதால் இந்த சிரமம் ஏற்படுகிறது.தமிழ்நாட்டு கல்வெட்டு படிகள் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைத்து பாதுகாப்பதுதான்ஆராய்ச்சி பணிக்கு பேருதவியாக இருக்கும்.எனவே, மத்திய அரசு (தொல்லியியல் துறை)தமிழ்நாட்டு கல்வெட்டு படிகள் பராமரிப்பு மையத்தை சென்னையிலேயே அமைத்திடநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.