tamilnadu

img

தில்லியில் தமிழ் அகாடமி... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு....

சென்னை;
தில்லியில் தமிழ் அகாடமியை உருவாக்கிட தில்லி மாநில அரசு முடிவுசெய்து அறிவித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தில்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தில்லியில் தமிழ் அகாடமியை துவக்க முடிவு செய்திருப்பதாக ஜனவரி3 அன்று தில்லி யூனியன் பிரதேச அரசு அறிவித்திருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து பெரும் மகிழ்ச்சியை அடைந்தோம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் எனது இதயப்பூர்வமான பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தியாவின் தலைநகரமானது, பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு
மொழிகளைப் பேசுகிற, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கிற மக்கள் வசிக்கக்கூடிய பெரும் நகரமாகும். அந்த வகையில் இந்திய தேசத்தின் பன்முகக் கலாச்சார ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிற நகரமாக விளங்குகிறது.

நாடு முழுவதும் பேசப்படுகிற பல மொழிகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற நகரமாகவும் தில்லி விளங்குகிறது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகிற தொன்மையும், வளமையும் நிறைந்த மொழியான தமிழுக்கு, தில்லியூனியன் பிரதேச அரசால் தில்லியில் ஒரு தமிழ் அகாடமி நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது ஆகும். இந்த அகாடமியில் தமிழ் மொழி மற்றும்கலாச்சாரம் தொடர்பாக எதிர்காலத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர பாடத்திட்டங்களை துவக்குவது என்ற எண்ணமும், தமிழ் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுவிரும்புகிற பலருக்கும் அது தில்லி யிலேயே கிடைப்பதற்கு வகை செய்யும்.தில்லி அரசின் இந்த அறிவிப்பு, உலகெங் கிலும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் பரிசாக கிடைக்கப்பெற்றிருக்கிறது.

எனவே தில்லியில் ஒரு தமிழ் அகாடமியை துவக்குவது என்ற முன்முயற்சியை மேற்கொண்ட தங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மீண்டும் ஒருமுறை பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.