சென்னை:
டெங்கு பரவலை தடுத்திட போர்க்காலஅடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடிதம் அனுப்பி யுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் அனுப்பி யுள்ள கடிதம் வருமாறு: கொரோனா நெருக்கடிகளிலிருந்து நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருவது தாங்கள் அறிந்ததே. 2021 மே மாதத்திலேயே உலக சுகாதார அமைப்பு ,எதிர்காலத்தில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக அறிக்கை ஒன்றில் சுட்டிக் காண்பித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங் களாக உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில்,டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் காரணமாக, 40 குழந்தைகள் உட்பட 50 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா, ஆக்ரா ஆகிய மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை ஊடகங்களின் வழியே அறிகிறோம்.டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த, சுகாதாரப்பணிகளில் குறிப்பாக ஏடிஎஸ் கொசுக்கள் பரவலை கட்டுப்படுத்துதல், வீடுகளில் கழிவு நீர், மழை நீர் தேங்குவதை தவிர்த்தல் ஆகிய சுகாதாரப் பணிகள் நடைபெற, தாங்கள் உடனடி கவனம்செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். கொரோனா தொற்று பாதிப்பு குறித்த அறிக்கையைப் போல, டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி, விபரங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.