சென்னை, ஏப். 25 -இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த வலியுறுத்தி புதனன்று (ஏப்.25) சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.நீதிமன்ற உத்தரவு, அரசு கொள்கை முடிவு ஆகியவற்றால் 5 ஆயிரத்து 400டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளுக்கு மாற்றாக 5 ஆயிரத்து 230கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படவில்லை. இதனா சுமார் 15ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.எனவே, மாற்றுப் பணி கேட்டு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் 969 இளநிலை உதவியாளர் பணியிடங்களில் 500 இடங்களுக்கு தேர்வு நடத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றுநிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.எனவே, இளநிலை உதவியாளர் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்,தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும், தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், தேதி உள்ளிட்ட விவரங்களை அறிவிக்க வேண்டும்,நீதிமன்ற தடையாணை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுபணியிட மாறுதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும், கடைகள் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும், பணியிட மாறுதலுக்கு ஊழியர்களின் பணிக்காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு சென்னை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க கவுரவத் தலைவர் எஸ்.அப்பனு தலைமை தாங்கினார். சம்மேளன பொருளாளர் ஜி.சதீஷ், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார், டாஸ்மாக் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், பொருளாளர் எஸ்.வடிவேலு, நிர்வாகிகள் என்.ராமச்சந்திரன், எஸ்.போஸ், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசினர்.