முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடி என்று தோழர் டி.செல்வராஜ் அவர்களுக்கு தமுஎகச புகழாரம் சூட்டியுள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:நாவலாசிரியர் தோழர் டி.செல்வராஜ் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.இன்றைய விவசாயிகளின் வாழ்க்கை பற்றிய நாவலை எழுதி அதன் நிறைவுப்பகுதிக்கான வேலைகளில் இருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது.1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில்முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் செல்வராஜ். 1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தையார் தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். திருவிதாங்கூர், கொச்சி சமஸ் தான அரசுபள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். கல்லூரிக்காலத்திலேயே நெல்லையில் தோழர்கள் தி.க.சிவசங்கரன்,தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை போன்ற இடதுசாரி இலக்கியவாதிகளான தோழர்களுடன் நட்பு ஏற்பட்டது.இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.அப்போது தோழர் ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில் அவருடைய படைப்புகள் வெளியாகின.‘ஜனசக்தி’ வார மலர்களிலும் அவரது கதைகள் வெளியாகின.
பத்திரிகையாளராக...
சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்றார். கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான ‘ஜனசக்தி’யிலும் இலக்கிய இதழான ‘தாமரை’யிலும் பகுதி நேரமாகப் பணியாற்றியவர் தோழர் டி.செல்வராஜ். அந்நாட்களில் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு அவருக்குக்கிட்டியது. டி.செல்வராஜ் அவர்களின் அன்றைய வாசிப்புப் பசிக்கு உணவாகப் பலபுத்தகங்களை ஜீவா வழங்கியுள்ளார். அவருடைய முதல் நாவலான “மலரும் சருகும்” நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும்,அன்று அம்மக்கள் நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.அந்நாவல் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.முற்போக்குத் தமிழ் நாவல் வரலாற்றின் முன்னோடி நாவலாக ‘மலரும் சருகும்’ இன்றைக்கும் மதிக்கப்படுகிறது.
தேயிலைத்தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட தேநீர் நாவல் அவரது அடுத்த முக்கியமான படைப்பாகும்.ஊமை ஜனங்கள் என்கிற பேரில் அக்கதை திரைப்படமாகவும் வெளி வந்தது.செம்மலரில் தொடராக வந்த “மூலதனம்” நாவல் உலகமயக் காலத்தில் முதலாளித்துவம் பற்றிய படைப்பு. திண்டுக்கல்லில் 40 களில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடத்தப்பட்ட தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை “தோல்” என்ற நாவலாகப் படைத்தளித்தார்.அதற்கு 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
நாடகாசிரியராக...
“நோன்பு”, “நிழல்யுத்தம்’, “செல்வராஜ் கதைகள்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் மலரும் சருகும்,தேநீர்,மூலதனம்,தோல் ஆகியநாவல்களையும் தந்த தோழர் செல்வராஜ் பாட்டு முடியும் முன்னே, யுக சங்கமம் போன்றமுழுநீள நாடகங்களையும் எழுதினார்.‘பாட்டு முடியுமுன்னே..’ நாடகத்துக்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதினார்.திரைப்பட நடிகர் டி.கே.பாலச்சந்திரன் தன்னுடைய மக்கள் நாடக மன்றத்தின் மூலம் அந்நாடகத்தைத் தமிழகம் எங்கும் எடுத்துச் சென்றார்.அந்த நாட்களிலேயே சாதி,மத மறுப்புத்திருமணம் செய்தவர். இவரது வாழ்விணையர் பாரதபுத்திரி 1947 ஆகஸ்ட் 15 அன்று பிறந்தவர்.அவர்களுக்கு இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும்.
இறக்கும்வரை எழுதிக் கொண்டே...
தமுஎகசவின் மாநில துணைத்தலைவராக நீண்டகாலம் பணியாற்றியுள்ள தோழர் டி.செல்வராஜ் படைப்புப் பணிகளோடு சேர்ந்துஅமைப்புப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். வழக்கறிஞராகவும் உழைக்கும் மக்களின் பல்வேறு வழக்குகளை நடத்திக் கொடுத்தவர்.இறக்கும்வரை எழுதிக்கொண்டே இருந்த ஒரு படைப்பாளி இப்போதும் நமக்காக ஒரு புதிய நாவலை விட்டுச் சென்றுள்ளார். அவருடைய மறைவு தமுஎகசவுக்கும் முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அவரைஇழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து தோழர்டி.எஸ். தன் படைப்புகள் வழியாக என்றும் நம்மோடு இருப்பார் எனக்கூறி கொடி தாழ்த்திஅவருக்குச் செவ்வணக்கம் செலுத்துகிறோம்.