காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற வியாழக்கிழமை (16.01.2025) அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் சென்னையின் பல்வேறு பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவார்கள். அப்போது, பொதுமக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் (Temporary Mini Control room) அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 Al Terrah Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.