tamilnadu

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அமைச்சர் தகவல்....

சென்னை:
அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள்களுக்கான இணைய வழி அடிப்படைப் பயிற்சி வகுப்பை திங்களன்று (ஜூலை 26) அவர் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் கற்றல் முறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் 5 நாள்களுக்கு இணைய வழி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,“ இணையதள கணினி வழி அடிப்படைப் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு 5 நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். இதன்மூலமாக மாணவர்களுக்கு நவீன மேம்பட்ட முறையில் கற்றலை வழங்க முடியும்” என்றார்.

அரசுப் பள்ளிகளில் இதுவரை 2,04,300 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 75,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார். நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டம் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கல்வி தொலைக் காட்சி தவிர்த்து மற்ற ஏதேனும் வழிகளில் மாணவர்களை சென்றடைய முடியுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் ஆலோசிக்க உள்ளதாகவும் அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.