tamilnadu

img

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துக.... மாநிலம் முழுவதும் மாணவர் சங்கத்தினர் போராட்டம்....

சென்னை:
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி ஜூலை 12 அன்று தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 75 சதவீதமான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு அறிவித்தாலும், கல்வியில் இலாபம் ஈட்டும் நோக்கத்தோடு மட்டுமே செயல்படும் பல தனியார் பள்ளிகள் வாழ்வாதாரத்தை இழந்துநிற்கும் ஏழை எளிய மக்களிடம் கட்டணம் என்றபெயரில் கொள்ளையடித்து வருகின்றன. இவ்வாறு கட்டணக் கொள்ளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். 75 சதவீதமான கட்டணம் என்றால்மொத்த கட்டணத்தில் 75 சதவீதமா அல்லதுகல்வி கட்டணத்தில்  75 சதவீதமா என்பதைஅரசு தெளிவுபடுத்த வேண்டும். சிபிஎஸ்இபள்ளிகள் தங்கள் கட்டணத்தை வெளிப்படையாக இணையத்தில் வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை நிபந்தனையின்றி உடனே வழங்க வேண்டும்.கல்வி தொலைக்காட்சியில் ஆங்கில வழியில்படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி பெறும்வகையில் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி பாலசுப்பிரமணியன் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிக்க வேண்டும். 

அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு தங்கள் பள்ளிக்கு நிர்ணயித்த கட்டண விவரங்களை வெளிப்படையாக நோட்டீஸ் போர்டில் ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் டிபிஐ வளாகத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் சந்துரு, மாவட்ட தலைவர் சுபாஷ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர், விக்னேஷ் மாவட்ட தலைவர் மிருதுளா, பங்கேற்றனர். 

ஆணையர் உறுதி
போராட்டத்திற்கு பின்பு தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகோபாலை சந்தித்துமனு அளிக்கப்பட்டது. அப்போது ஆணையர் பனிரண்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலே அரசு பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளின் கட்டணங்கள்  இணையத்தில் உடனடியாக வெளியிடப்படும். கல்வி தொலைக்காட்சியில் ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும்  கல்வி சென்றடைய வழிவகை செய்யப்படும். 75 சதவீதமான கட்டணம் என்பது கல்விக்கட்டணத்தில் இருந்து மட்டும் தான். மற்ற எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. கட்டணம் அதிகம் வாங்கும் பள்ளியின் மீது புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். 

மயிலாடுதுறையில் மாவட்டசெயலாளர் அமல்காஸ்ட்ரோ தலைமையிலும், தஞ்சாவூரில்மாவட்டச் செயலாளர் அரவிந்த் தலைமையிலும், புதுக்கோட்டையில்  மாவட்டத்தலைவர் ஓவியா,செயலாளர் ஜனார்த்தனன் தலைமையிலும்,   தேனியில்  தலைவர் பிரேம், செயலாளர் நாகராஜன் தலைமையிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் முகேஷ் தலைமையிலும், கடலூர் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் செம்மலர் தலைமையிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் தமிழ் பாரதி தலைமையிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் வசந்த் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் முதன்மை கல்வி அலுவலரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. திருவாரூரில் மாநிலத் துணைத் தலைவர் பிரகாஷ், மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையிலும், விருதுநகர் மாவட்டத் தலைவர் சமயன், செயலாளர் மாடசாமி தலைமையிலும், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்    மாநகர் மாவட்டத் தலைவர் பாலா, மாவட்டச் செயலாளர் வேல் தேவா,பிருந்தா தலைமையிலும்,   திருச்சிமாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையிலும், நாமக்கல் மாவட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமையிலும், ஈரோடு மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் வினிஷா  தலைமையிலும்,   கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் அசாருதீன், செயலாளர் தினேஷ் தலைமையிலும், திருப்பூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் சம்சீர்தலைமையிலும்  முதன்மை கல்வி அதிகாரியைசந்தித்து மனு அளிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக  20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.