சென்னை:
பயணிகள் ரயிலை இயக்கக்கோரி செப்டம்பர் 13 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத்தலைவர் என்.ரெஜீஸ் குமார் தலைமையில்குடவாசலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலப்பொருளாளர் தீபா மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
கொரோனா பேரிடரையொட்டி ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டபோது மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும், இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத் தேவைகளுக்கான பயணங்களுக்காக பயன்படுத்தும் சாதாரண பயணிகள் ரயில் இன்னும் இயக்கப்படாத நிலை உள்ளது. எனவே, ஒன்றிய அரசும், ரயில்வே துறையும் மிகவும் குறைந்த கட்டணத்தில் எளிய மக்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும் சாதாரண பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
மேலும், தற்போது இயக்கப்படும் ரயில்கள், சிறப்பு ரயில்கள் என்ற பெயரிலேயே இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்த அனைத்துகட்டண சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா பேரிடரால் வாழ்வாதாரநெருக்கடியில் இருக்கக்கூடிய மக்களிடம் இருப்பதையும் பறிக்கிறதாகவே ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே துறையின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எனவே, ரயில்களை ஏற்கனவே இயங்கிய பெயர்களில் இயக்கவும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணசலுகைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 13 அன்று, சென்னையில் தென்னக ரயில்வே மேலாளரிடமும், திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம் ஆகிய ரயில்வே கோட்ட மேலாளர்களிடமும் மனு கொடுக்கும் இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் ஆசிரியர் பட்டயப் படிப்புபருவத் தேர்வு விடைத்தாளை திருத்துவதில் உள்ள முரண்பாடுகள் காரணமாக கடந்த 2019, 2020 ஆண்டுகளில் 98 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு உரிய காலஅவகாசம் வழங்காமல் இந்த கல்வியாண்டுக்கான பருவத் தேர்வும் தொடங்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் தேர்வு கட்டணத்தையே செலுத்த முடியவில்லை. விடைத்தாள் திருத்தும் பிரச்சனைஇன்னும் முடிவுக்கு வராததால் தேர்வு எழுதினாலும் பழைய கதையே தொடரும் என்பதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஆர்வமின்றி உள்ளனர். எனவே, தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதுடன், இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கி தேர்வு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக அன்றைய அதிமுக அரசுஉயர்த்தியது. வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நசுக்கும் இந்த முடிவை வாபஸ்பெற வேண்டுமென குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் தமிழக அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. எனவே, தமிழக இளைஞர்களுக்கு எதிரான இந்த முடிவை தமிழக அரசுஉடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.