tamilnadu

img

வங்கிகளில் ரூ.7 ஆயிரம் கோடி மோசடி: 15 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை

சென்னை:
நாடு முழுவதும்  பல்வேறு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வந்த புகாரையடுத்து செவ்வாயன்று 15 மாநிலங்களில்  சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வங்கிகளில் கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். தமிழகத்திலும் சிபிஐ அதிகாரிகள் 35 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

 பல்வேறு மாநிலங்களில் வங்கிகளில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி மற்றும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டினர். இதை வைத்து அடுத்தகட்ட விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதன்படி செவ்வாயன்று நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தில்லி, குஜராத், அரியானா, சண்டிகர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
தில்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையை நடத்தினர்.   வங்கிகளில் பணியாற்றுகின்ற, முறைகேடுகளில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தெந்த பகுதிகளில் சோதனை நடைபெற்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் சி.பி.ஐ. தரப்பில் வெளியிடப்படவில்லை.