சென்னை:
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளில் சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஞாயிறன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மது விற்பனை அதிகரித்தது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மது விற்பனை செய்யப் பட்டது. இதிலும் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ.40.39 கோடிக்கும், மதுரையில் - ரூ.40.75 கோடி, சேலத்தில் - ரூ.39.40 கோடி, கோவையில் - ரூ.35.9 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.