tamilnadu

கொரோனா நிவாரணத்துக்கு ரூ.10 லட்சம்... போக்குவரத்து ஓய்வூதியர்கள் முதலமைச்சரிடம் வழங்கினர்....

சென்னை:
கொரோனா நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 10 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப் பட்டது.இதற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திங்களன்று (ஆக.9) தலைமை செயலகத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன், பொருளாளர் ஏ.வரதராஜன், துணைப்பொதுச் செயலாளர் கோவை செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

இதனையொட்டி முதலமைச்சரிடம் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர், போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும், அகவிலைப்படி கோரிக்கை 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என்று ஒப்புக் கொண்டனர். இதன்படி, பேச்சுவார்த்தை முடிந்து 20 மாதங்களாகியும் அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தவில்லை.2016 ஜனவரி முதல் ஒவ்வொரு அரையாண்டிலும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 67 மாதங்களாக வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசின் ஒப்புதலை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக ஒப்புக் கொண்டனர். ஆனாலும் வழங்காமல் உள்ளனர்.அரசுத்துறைகள், மின்வாரியம் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற் றோருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. எனவே, இவ்விரு பிரச்சனைகளிலும் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.