சென்னை:
திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு அதற் கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-படப்பிடிப்புத் தலங்கள், படப்பதிவு அரங்கம், படத்தொகுப்பு அறைகளில் ஒருவருக்கொருவர் ஆறடி இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். படப்பிடிப்பின் அனைத்து நிலைகளிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த அளவே நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்க வேண்டும்.படப்பிடிப்பு அரங்கங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது. வெளிப் புறப் படப்பிடிப்பின்போது கூட்டம் சேராமல் இருக்க உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். படப்பிடிப்பு அரங்கங்களில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெவ்வேறு நேரங்களை ஒதுக்க வேண்டும். அரங்கங்கள், ஒப்பனை அறைகள், வாகனங்கள், கழிப்பறைகளில் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும். கையுறைகள், காலுறைகள், முகக்கவசம், முழு உடல் கவசம் ஆகியவற்றைப் போதுமான அளவு வழங்க வேண்டும்.கேமரா முன் நடிப்பவர்களைத் தவிர மற்ற நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடைகள், ஒப்பனைப் பொருட்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதைக் குறைக்க வேண்டும்.
ஒப்பனைக் கலைஞர்கள், சிகை அலங்காரக் கலைஞர்கள் முழு உடல் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரே கருவிகளைப் பலரும் கையாளும்போது கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். சட்டையில் பொருத்தும் மைக்கைத் தவிர்க்க வேண்டும், ஒருவர் பயன்படுத்தும் மைக்கைப் பிறருக்குப் பயன்படுத்தக் கூடாது.மைக்கின் முன்பகுதியை நேரடியாகத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். படப்பிடிப்புக்குக் குறைந்த அளவு அரங்கப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும், பயன்படுத்து முன் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.நோய்த் தாக்குதலுக்குள்ளாகும் அபாயமுள்ளவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். உள்நுழையுமிடத்தில் வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்து, கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
பணியிடங்கள், பொதுப் பயன்பாட்டு வசதிகளை அடிக்கடி கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். வளாகத்தில் யாருக்காவது கொரோனா இருப்பது தெரிந்தால் முழுவதும் கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் தற்காலிகமாகத் தனிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.