சென்னை:
டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணிவரன் முறை, காலமுறை ஊதியம், சுழற்சி முறை பணியிட மாறுதல், இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் அறிவித்திடக் கோரி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து வியாழனன்று (செப். 2) பேரணி நடைபெறுதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதனன்று டாஸ்மாக்சில்லரை விற்பனை பொதுமேலாளர், துணை பொது மேலாளர் உள்ளிட் டோர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். அப்போது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து நடைபெற இருந்த பேரணியை ஒத்திவைத்து விளக்கவுரை கூட்டமாக நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், ஆட்சிக்கு வருவதற்குமுன்னால் இடதுசாரி கட்சிகளோடு இணைந்து பல போராட்டங்களில் திமுகவினர் கலந்து கொண்டனர். கூட்டாக நடத்தப்பட்ட போராட்டங்களில் எழுப்பப்பட்ட அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் இருக்கக் கூடிய, தற்காலிக பணியில் இருக்கக் கூடிய டாஸ்மாக், அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப் பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் திமுக அறிவித்திருந்தது.
பெரிய நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூட இஎஸ்ஐ, பிஎப் கட்டாயம் என சட்டத்தில் உள்ளது. ஆனால் எந்த சட்டமும் இல்லாத தொழிலாளியாக டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளனர். பல சட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக பல சட்டங்களை அமல் படுத்த வேண்டிய நிர்பந்தம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் போராட்டம் நடத்தும் போது, 300 ரூபாய், 500 ரூபாய் என ஊதிய உயர்வு வழங்குகிறார்கள். கொரோனா காலத்தில் டீக்கடை உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப் பட்டன. ஏன் டாஸ்மாக் கடை திறக்கவில்லை என்றால் மக்கள் செத்து போய் விடுவார்கள் என்றா திறந்தார்கள். இல்லை. டாஸ்மாக் கடையை திறக்கவில்லை என்றால் அரசு செத்து போய் விடும். அரசின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஆக்சிஜன் வழங்கியவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள். அப்படிப்பட்ட தொழிலாளர்களை தியாகம் செய்ய வேண்டும் என்று அரசு கூறுவது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார். கொரோனா தொற்று பாதிக்க வாய்ப்புள்ள அடித்தட்டு மக்கள்தான் டாஸ்மாக் கடைக்கு வருகிறார்கள். தனிமனித இடைவெளியை அவர்கள் கடைபிடிப்பதில்லை. பாதுகாப்பற்ற சூழ்நிலையில்தான் ஊழியர்கள் பணி செய்ய வேண்டிய நிலை. 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கொரோனா தொற்று பாதிக் கப்பட்டு இறந்துள்ளனர். எனவேதான் டாஸ்மாக் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோருகிறோம். அதேபோல் டாஸ்மாக் கடைகளை மூட நேரிடும் போது அந்த தொழிலாளர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படாமல் மாற்றுப் பணி வழங்க வேண்டும். மணல் குவாரிகள், கிரானைட் ஆகியவற்றை முறைப்படுத்தினாலே அரசுக்கு போதிய வருவாய் கிடைக்கும், நிதி நெருக்கடி ஏற்படாது என்றார்.
திமுக தேர்தல் அறிக்கையிலே அறிவித்துள்ளதை அமல்படுத்த வேண்டும் என தொழிலாளர் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்த உடன் பேசலாம் என தெரிவித்துள்ளார்.இதற்கிடையே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து துறையினரும் போராடுவது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் போராட்டம் நடைபெற்றாலும் முந்தைய அதிமுக அரசு மதிக்கவில்லை. ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு தொழிலாளர் கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அறிவித்துள் ளது. போராட்டம் அறிவித்தவுடன் நிர் வாகம் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுகிறோம் என எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத் துள்ளனர். போராட்டத்தை கைவிடுங் கள் என்று வலியுறுத்தினர். இதுவே நமது போராட்டத்தின் முதல்கட்ட வெற்றி. திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப் படியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அனைவரையும் ஒன்றிணைத்து அடுத்தகட்ட போராட் டங்களை முன்னெடுப்போம் என்று அவர் கூறினார்.
சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேசுகையில், டாஸ்மாக் ஊழியர்கள் படும் துயரத்தை அரசு நன்கு அறிந்துள்ளது. தமிழக பொருளாதாரத்தை பாதுகாக்க டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. ஆனால் அந்த ஊழியர்களின் நலன் பாதுக்கப்படவில்லை. வரும் 7ஆம் தேதி நடைபெறும் மானியக் கோரிக்கையின் போது உங்களது கோரிக்கைகள் முன் வைக்கப்படும். உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்றார்.இதில் சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஜான் அந்தோணிராஜ், சி.வேல்முருகன், பொருளாளர் ஜி.சதீஷ், கே.பி.ராமு, சிஐடியு மாநில துணைத் தலைவர் ப.பாலகிருஷ்ணன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் ஆகியோரும் பேசினர்.