சென்னை:
கடைகளில் நீண்டநேரம் நின்று கொண்டே பணிபுரியும் ஊழியர்கள் அமர இருக்கை வசதி செய்துதரவேண்டும் என்றும் இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலையிடவேண்டும் என்றும் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தினார்.
மாநில தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாட்டில் செயல்படும் முக்கிய தொழிற்சங்கங்களுடன் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 1) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொழிலாளர்களைத் தொழிற்சங்கம் ஆரம்பித்ததற்காக அவர்களை பணிநீக்கம் செய்தும், பல தண்டனைகளை வழங்கியும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்றும், தொழிலாளர் அலுவலர் முன்பு ஏற்றுக்கொண்ட அறிவுரைகளைப் பின்பற்றாமல் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும், தொழிலாளர் துறை இதுகுறித்து தலையிட்டு நிர்வாகத்தை அழைத்துப் பேசி சுமூக முடிவு எட்டப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
, கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொடர்ந்து பல மணிநேரம் ஓய்வின்றி நின்று கொண்டே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டுமென்றும், புலம்பெயரும் தொழிலாளர்கள் சட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டுமென்றும் அ.சவுந்தரராசன் கூறினார்.
தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், எம்.பி பேசுகையில், தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டுமென்றும், குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.சம வேலைக்கு சம ஊதியம், பிழைப்பூதியம் வழங்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டுமென்றும், தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் கூறினார். மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உள்ளிட்ட அனைத்து முத்தரப்புக் குழுக்களும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
ஐஎன்டியுசி சார்பில் மாநில தலைவர் வி.ஆர். ஜெகநாதன், தொழிற்சாலைகள் சட்டத்தை முழுமையாகவும், கடுமையாகவும் அமல்படுத்தி தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்புகள் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டுமென்றார். எச்.எம்.எஸ் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்களின் பங்களிப்புத் தொகை ரூ.50 ஆகவும், வேலையளிப்பவர் பங்களிப்புத் தொகை ரூ,100 ஆகவும் உயர்த்தப்பட வேண்டுமென்றும், நலவாரியங்களின் கீழ் செயல்படும் ஓய்வு இல்லங்கள் சீரமைக்கப்பட வேண்டுமென்றும், 24 காலண்டர் மாதங்களில் 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் தொழிலாளர் துறை தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் பேசிய அமைச்சர் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள கேட்பு மனுக்களில் அடுத்த 10 நாட்களில் 50,000 தொழிலாளர்களின் மனுக்கள் தீர்த்து வைக்கப்பட்டு உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொழிற்சங்கங்கள் கோரியவாறு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முத்தரப்பு குழுக்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாரியங்களில் மகப்பேறு உதவித்தொகை மற்றும் பிற உதவித் தொகைகள் உயர்த்துவது பற்றிப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், வருங்காலங்களில் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டங்கள் ஆறு மாதங்களுக்கொரு முறை நடத்தப்படும் என்றும், தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் செயல்படும் ஓய்வு இல்லங்கள் புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.