தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 480 இடங்கள் உள்ளன.
பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2021 – 22 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (கலையியல் பிரிவு -BVSc AH (Academic) பிரிவில் 22,240 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 21,899 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (தொழிற்கல்வி BVSc AH (Academic) பிரிவில் 248 மாணவர்கள் விண்ணப்பித்தினர். அதில் 245 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். பிடெக் படிப்புகளுக்கு 4,410 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 4,315 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இளநிலை கால்நடை மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பித்த 26,898 மாணவர்களில் 26,459 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பி.வி.எஸ்சி. – ஏ,ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடப்பட்டது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியலை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.