சென்னை
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் புரட்டியெடுத்து வருகிறது. குறிப்பாக மதுரை, திருச்சி ஆகிய நகரங்கள் வெயிலால் வாடும் நிலையில், மேற்கு தொடர்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் கனமழை பெரிது வருகிறது.
இந்நிலையில், வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது," வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது, சென்னையைப் பொறுத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.
சேலம், தர்மபுரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் என்பதால் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 4 சென்டி மீட்டர் மழையும், கடலாடியில் 3 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.